சீமானை மறைமுகமாக தாக்கிய கமல்ஹாசன்?

நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும்போது அவருடைய இல்லத்திற்கே வந்து ஆதரவு கொடுத்தவர் நாம் தமிழர் கட்சியின் சீமான். வரும் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன், சீமான் ஆகிய இருவரும் 40 தொகுதிகளில் தனித்து போட்டி என்று அறிவித்துள்ள நிலையில் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று ஒருசிலர் விருப்பம் தெரிவித்தனர்.

தமது கட்சியுடன் நல்லவர்கள் கூட்டணி சேரலாம் என கமல் அழைப்புவிட, அரசியலில் நான் தான் சீனியர் எனவே என்னுடன் தான் கமல் கூட்டணி சேர வேண்டும் என்று சீமான் ஈகோவுடன் பதிலளித்ததால் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது

இந்த நிலையில் நேற்று மகளிர் தினவிழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழர் என்பது ஒரு அடையாளமே, அது நாட்டை ஆட்சி செய்யும் தகுதி அல்ல. திறமை உள்ளவர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும். ஆட்சி செய்யும் அளவுக்கு நல்ல திறமையுள்ள தமிழர்கள் இங்கு அதிகம் உள்ளனர் என்று கூறினார்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முன்னரே அவர் தமிழர் அல்ல, அதனால் தமிழகத்தில் அவர் கட்சி ஆரம்பிக்க கூடாது என்று சீமான் கூறி வரும் நிலையில் தமிழர் குறித்து கமல் நேற்று பேசியது, தனது நாற்பதாண்டு நண்பருக்கு ஆதரவாக கூறியது மட்டுமின்றி சீமானுடன் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.