ரஜினியின் நோக்கம் குறித்து ஹார்வர்டு பல்கலையில் பேசிய கமல்
- IndiaGlitz, [Sunday,February 11 2018]
உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை முறைப்படி கட்சி ஆரம்பித்து தொடங்கவுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் தனது உரையை நிகழ்த்தினார். அரசியலில் தான் வித்தியாசமாக இருக்க விரும்புவதாக தெரிவித்த கமல், தனது நோக்கமும், ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான்' என்று கூறினார்.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கமல் மேலும் பேசியதாவது: 2018-ல் அரசியல் பயணத்தை தொடங்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை துவங்க உள்ளேன். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை நான் எதிர்பார்க்கின்றேன். நான் தேர்வு செய்யும் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். திட்டங்களை அமல்படுத்துவதில் குறைகள் உள்ளன. இதுவே மாநில அரசி்ன் நிதிச்சுமைக்கு காரணமாக உள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்கினால் நமது பாக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும் போது நாம் கேள்வி கேட்கமுடியாது.
பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலுக்கு செல்லவில்லை. ஆனால் இவர்கள் மக்களுக்காக போராடினார்கள். தமிழகத்தில் ஓவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். தேர்தல் அரசியலை தாண்டி பெரியார் ,காந்தி எனது ஹீரோக்கள்.
நான் வித்தியாசமானவர் என கூறவில்லை. அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். எனது நோக்கமும், ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான்.
இவ்வாறு கமல் பேசினார்.