சாப்பிட்ட சோறுக்கு நன்றி செய்வேன்: விவசாயிகள் சங்க கூட்டத்தில் கமல் பேச்சு
- IndiaGlitz, [Saturday,November 04 2017]
உலகநாயகன் கமல்ஹாசன் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை உடைக்கும் வகையில் அவர் சமீபத்தில் எண்ணூரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் தற்போது அவர் விவசாயிகள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மற்ற மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்யும் மத்திய அரசு தமிழகத்திற்கு ஏன் மறுக்கிறது? என்னால் முடிந்த அளவுக்கு விவசாயிகளுக்கு உதவி செய்வேன். அது இதுவரை நான் சாப்பிட்ட சோறுக்கு நன்றி செலுத்தும் விதமாக இருக்கும். வேளாண் துறையை தொழில்துறையாக்கினால்தான் அனைவரும் வாழ முடியும். பல ஆண்டுகளாக விவசாயிகளின் பெருமைகளையும் தொல்லைகளையும் கேட்டு வளர்ந்தவன் என்ற முறையில் விவசாயிகளின் இன்னல்கள் எனக்கு புரியும்.
நாம் கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருந்துவிட்டோம், இப்பொழுதாவது விழித்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் மத்தியில் வாக்கு சேகரிக்க வரவில்லை, சோறு சேகரிக்கவே வந்துள்ளேன். நான் உழவனின் மகன் இல்லை எனினும் நான் உழவனின் மருமகன். புராணங்களில் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியதைப்போல, நான் விவசாயிகளுக்கு உதவ வந்துள்ளேன். குளங்கள், ஏரிகளை சுத்தம் செய்ய என்னிடம் உள்ள 5 லட்சம் பேரை அனுப்புகிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் விவசாயிகள் சங்க கூட்டத்தில் பேசியுள்ளார்.