கமல்ஹாசனுக்கு தக்க பதிலடி தரப்படும்: உதயநிதி ஸ்டாலின்

  • IndiaGlitz, [Monday,February 18 2019]

கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், திமுக,அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளையும் ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேபோல் அதிமுக அமைச்சர்களும், திமுக பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு பதிலடி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் திமுகவின் ஊழல் பொதிகளை சுமக்க தான் தயாராக இல்லை என்றும், தான் ஆரம்பித்து வைத்த கிராம சபையை திமுக காப்பி அடிப்பதாகவும், நான் சட்டசபையில் இருந்து வெளியே வரும்போது சட்டையை கிழித்து கொண்டு வெளியே வரமாட்டேன் என்றும் கமல் திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் தாக்கியிருந்தார்.

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார். கிராம சபை கூட்டங்களை திமுக காப்பியடிக்கவில்லை. திமுக தலைவர் முதல்முறையாக கிராமத்திற்கு போவதாக கமல் கூறியது தவறானது. அவரது விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் கமல்ஹாசனின் கருத்து குறித்து நடிகர் ராதாரவி கூறியபோது, 'திமுகவை ஊழல் மூட்டை என சொல்லும் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து பரிசுத்த ஆவியாக இருக்கட்டும். கமல்ஹாசன் நல்ல நடிகர். ஆனால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியாததால் அரசியலுக்கு வந்துள்ளார்' என்று கூறியுள்ளார்.