பால்கனி அரசாங்கம்: மோடி அரசை விமர்சனம் செய்த கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் இந்தியாவிலும் தொடங்கிய நாள் முதலே மத்திய, மாநில அரசுகளை தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசை ‘பால்கனி அரசு’ என்று நேற்று கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மும்பையில் உள்ள வேறு மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திடீரென போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை மும்பை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே டெல்லியிலும் இதுபோன்ற ஒரு போராட்டம் சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘பால்கனியில் உள்ளவர்களுக்கு தரையில் உள்ளவர்களின் நிலைமை தெரியாது. முதலில் டெல்லி, இப்போது மும்பை என புலம்பெயர்ந்தோர் போராடி வருகின்றனர். அவர்கள் வெடிகுண்டு மாதிரி. அது கொரோனாவை விட ஆபத்தானது. இந்த ஆபத்தை தடுக்க பால்கனி அரசாங்கம் தரையில் என்ன நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’என்று கூறியிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க பால்கனியில் நின்று கைதட்டுமாறும், கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்க பால்கனியில் அகல்விளக்கு ஏற்றுமாறு பிரதமர் கூறியதை தொடர்ந்தே கமல், மோடி அரசை ’பால்கனி அரசாங்கம்’ என விமர்சனம் செய்திருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.