திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியா? கமல் பதில்
- IndiaGlitz, [Thursday,August 30 2018]
திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் காலமானதை அடுத்து இந்த இரு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியை இழந்துவிட்ட ஆளும்கட்சியான அதிமுக இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று வியூகம் வகுத்து வருகிறது. திமுகவின் புதிய தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் திமுகவும் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
இந்த நிலையில் புதியதாக அரசியல் களமிறங்கியிருக்கும் கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து நேற்று மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன், 'தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் மனநிலையில் இல்லை என்றும் தங்கள் கட்சி போட்டியிடவில்லை என்றாலும் இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வேலையில் ஈடுபடுவோம் என்றுன் கமல் கூறினார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சி தயாராக இருப்பதாகவும் கமல் தெரிவித்தார்.