பிரதமர் மோடிக்கு டேக் செய்துவிட்டால் போச்சு: கமல்ஹாசன் பதில்!

பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு வைத்து கமல்ஹாசன் பதிவுசெய்த டுவிட்டில் பிரதமர் டுவிட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்யாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது பிரதமருக்கு டேக் செய்துவிட்டால் போச்சு என்று அவர் பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்த டுவிட் ஒன்றை பதிவு செய்தார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே.... என்று பதிவு செய்திருந்தார்.

இந்த டுவிட்டில் அவர் பிரதமர் உள்பட யாருடைய டுவிட்டர் அக்கவுண்டையும் டேக் செய்யவில்லை. இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது, பிரதமருக்கு கேள்வி எழுப்பி டுவிட் செய்த நீங்கள் பிரதமருக்கு ஏன் டேக் செய்யவில்லை என்ற கேள்விக்கு ‘டேக் செய்து விட்டால் போச்சு என்று அவர் கூறினார்.