வசந்தகுமார் மறைவுக்கு கமல், ரஜினி, பிரபு இரங்கல்!

பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் நேற்று மாலை மறைவடைந்த நிலையில் அவரது மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் வசந்தகுமார் மறைவுக்கு தங்களது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு என்று கூறியுள்ளார்.

அதேபோல் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில், ‘அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் வசந்தகுமார் மறைவு குறித்து, ‘நல் உள்ளம் கொண்டவர் நேர்மையானவர் உழைப்பாளி கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், என் அன்பு அண்ணாச்சி வசந்த் அன் கோ வசந்தகுமார் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.. அவர் ஆத்மா சாந்தி அடைய அப்பாவை வேண்டுகிறேன் இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.