நண்பராக இருக்காவிட்டாலும் நல்லவராக இருங்கள்: எஸ்.வி.சேகருக்கு கமல் கட்சி கண்டனம்
- IndiaGlitz, [Saturday,December 14 2019]
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் குறித்து விமர்சனம் செய்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு பதிலடி தரும் வகையில் அக்கட்சியில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நீண்ட நெடுங்காலம் எங்கள் தலைவர் நம்மவரின் நண்பராக இருந்த திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு பணிவான வணக்கம். சாதி சமயமற்ற வர்க்க பேதமற்ற, மனிதனை மனிதனாக பார்க்கும் முற்போக்கு சிந்தனையாளர் நம்மவர் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி மாநில செயலாளராக என்னை நம்மவர் நியமித்த செய்தியினை பற்றி விமர்சனமென்ற பெயரில் நம்மவர் சாதிய சிந்தனையுள்ளவர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றதை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருஇறது.
சாதிகளுக்கு ஆதரவு என்பது வேறு, காலகாலமாக ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தை கைதூக்கிவிட்டு, யாரும் யாருக்கும் தாழ்ந்தவரல்ல என்ற சூழல் உருவாக, அந்த சமூகத்தின் மீது அக்கறை செலுத்துவது என்பதுவேறு. இப்படிபட்ட அக்கறை கட்சிகளுக்கு மட்டுமல்ல அரசுகளுக்கே உண்டு. அதனால் தான் அரசாங்கமே அதற்கான துறைகளை உருவாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற அமைப்புகளில் பிரதுறித்துவம் கிடைக்கச் செய்ய இடஓதுக்கீட்டை அமல்படுத்தியிருக்கிறது.
இதுவரை அமல்படுத்திய இட இடஓதுக்கீட்டில் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியவில்லை இன்னும் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இடஒதுக்கீடு சலுகையைமேலும் பத்தாண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் மத்திய அரசை நிர்வகிப்பது நீங்கள் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிதான் என்பது தாங்கள் அறிந்ததே. நீங்கள் எங்கள் தலைவரை பார்த்து அவருக்கு சாதிய சிந்தனை இருக்கிறது என்று சொல்லும் கூற்று உண்மையென்றால் அந்த சிந்தனை பாரதிய ஜனதாவிற்கும் இருக்கிறது என்று அர்த்தமாகிறது. எனவே, நீங்கள் முதலில் சீர்திருத்தவேண்டியது நீங்கள் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியைதான்.
அப்படியல்லாமல் உங்கள் விரல் நம்மவரை மட்டும் நோக்கி நீளுமானல், அது நீங்கள் நம்மவர் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியையும், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூதாயத்தின் மீது கொண்ட குரோத மனப்பான்மையையுமே காட்டும். எங்கள் தலைவரின் நண்பரே, நீங்கள் நண்பராக இருக்க வேண்டாம். குறைந்தபட்சம் நல்லவராக இருக்கப்பாருங்கள்.