இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை: கமல்ஹாசன்

சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, அவர் மீது வழக்குகளும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்த கமல்ஹாசன் இன்று மீண்டும் திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது தான் கூறிய இந்து தீவிரவாத பேச்சு சரித்திர உண்மை என அவர் மீண்டும் தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் கமல்ஹாசன் பேசியதாவது: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன். தேர்தல் அரசியலில் சேர்ந்த பின், ஒரு இனம் மட்டும் போதுமா ? மக்கள் அனைவருக்குமே நீதி கிடைக்க வேண்டும் என பேசினார்.

மேலும் யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும் என்றும் கமல்ஹாசன் பேசினார்.