40 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் போட்ட பிள்ளையார் சுழி: இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரித்த திரைப்படம் ஒன்று 40 ஆண்டுகள் கொண்டாட்டத்தை கொண்டாடி வரும் நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் நன்றி கூறியுள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் ’மூன்றாம் பிறை’. கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில், பாலுமகேந்திரா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆனதை அடுத்து அதன் கொண்டாட்டத்தை கமல் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

வெறும் 33 லட்சத்தில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாமல் உள்ளது என்பதும் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலான ‘கண்ணே கலைமானே’ பாடல் இடம்பெற்ற படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்து ’மூன்றாம் பிறை’ படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் சத்யஜோதி நிறுவனத்தின் முதல் படமான ’மூன்றாம் பிறை’ வெளிவந்து இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. படம் மாபெரும் வெற்றி அடைந்து மிகுந்த பாராட்டுகளையும் பல முக்கிய விருதுகளை அள்ளிக் குவித்தது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் இசை மற்றும் பின்னணி இசை. அந்த அளவிற்கு இப்படத்தின் பாடல்கள் சாதனை படைத்தது.

40 ஆண்டுகள் ஆகியும் இன்றும் இப்படத்தில் உள்ள பாடல்களின் தாக்கம் குறையவில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் எங்கள் நிறுவனத்தின் வெற்றி திரை பயணத்திற்கு தாங்கள் இட்ட இந்த பிள்ளையார் சுழியே காரணம். இதற்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.