கமல் கட்சியில் சேருகிறாரா டி.என்.சேஷன்?
- IndiaGlitz, [Friday,February 16 2018]
உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் பல விஐபிக்கள் அன்றைய தினம் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன்னர் கமல்ஹாசன், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், 'தனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேருவேன் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கூறியதாக தெரிவித்தார். மேலும் தனது கட்சியின் பெயரை பிப். 21ஆம் தேதி கண்டிப்பாக அறிவிப்பேன் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.என்.சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோதுதான் அந்த பதவிக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருந்தது என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதே அவருடன் துணிச்சலாக மோதிய அதிகாரி என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்த நிலையில் கமல் கட்சியில் டி.என்.சேஷன் சேர்ந்தால் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலம் கிடைப்பதோடு கமலுக்கு நல்ல வழிகாட்டியுமாக இருப்பார் என்று கருதப்படுகிறது.