கமல் ஒரு போலி பகுத்தறிவாதி: தமிழிசை செளந்திரராஜன்
- IndiaGlitz, [Friday,July 13 2018]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், அதன் பின்னர் உயர்நிலைக்குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று உயர்நிலைக்குழுவை கலைத்துவிட்ட அதற்கு பதில் பொதுக்குழு உறுப்பினர்களை கமல்ஹாசன் நியமனம் செய்துள்ளார். தனது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தையொட்டி இந்த மாற்றத்தை கமல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நேற்று தொண்டர்கள் முன் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகம் முன் கட்சிக்கொடியை ஏற்றினார்.
இந்த நிலையில் நேற்று கமல் கொடியேற்றிய நாளும், கட்சி தொடங்கிய நாளும் அமாவாசை தினம் என்றும், பகுத்தறிவாளரான கமல் அமாவாசை அன்று திட்டமிட்டு கட்சியை தொடங்கி, கொடியையும் ஏற்றினாரா? அல்லது இது தற்செயலாக நிகழ்ந்ததா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மய்யம் என கட்சி ஆரம்பித்தவர் போலி பகுத்தறிவு உள்ளவர் என்றும், கட்சி தொடங்கியதும், கொடி ஏற்றியதும் அமாவாசையில் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்து ஏன் வேஷம் போட வேண்டும்? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழிசையின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.