மதுவிலக்கு சாத்தியமில்லை.. ஆனால் இதை செய்யலாம்.. அரசுக்கு கமல்ஹாசன் அறிவுரை..!

  • IndiaGlitz, [Sunday,June 23 2024]

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறிய நிலையில் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வள்ளுவர் தனது திருக்குறளில் கள்ளுண்ணாமை குறித்து ஒரு அதிகாரம் இயற்றி இருப்பதை அடுத்து அந்த காலத்தில் இருந்தே மது இருந்தது உறுதி செய்யப்படுகிறது. எந்த அரசாக இருந்தாலும் மதுவில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை கண்டிப்பாக மனோதத்துவ ரீதியாக ஒரு அளவுக்கு மேல் குடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அதுதான் மிகவும் முக்கியம்.

சாலை விபத்து நடப்பதற்காக போக்குவரத்து நிறுத்த முடியாது, வாகன வேகத்தை வெகுவாக குறைக்கவும் முடியாது, அதுபோல் இது போன்ற சில அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது என்பதற்காக மதுவை ஒழிக்க முடியாது, பெரிய ஆலைகள் வைத்து நடத்துகிறார்கள், வீதிக்கு வீதி கடைகள் வைத்து நடத்துகிறார்கள். மருந்து கடைகளை விட அதிகமாக மது கடைகள் இருக்கின்றன, எனவே மக்களுக்கு குறைவாக குடியுங்கள் என்று அறிவுரை செய்ய வேண்டும்.

அறிவுரை செய்யும் பதாகைகள் டாஸ்மாக் பக்கத்தில் இருக்க வேண்டும், மதுவை உடனடியாக நிறுத்த முடியாது, டாஸ்மாக்கை உடனடியாக இழுத்து மூட முடியாது, அப்படி சொல்வது தவறான கருத்து, அதற்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன, அமெரிக்காவே ஒரு முன்னுதாரணம். மதுவிலக்கு பரிபூரணமாக கொண்டு வந்தால் இன்னும் அதிகமாக தான் மாஃபியாக்கள் தோன்றுவார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.