சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? கமல்ஹாசனின் ஆவேச வீடியோ!

சூரப்பா ஆட்சியாளர்களால் வேட்டையாடப்படுவது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் அவர் ஆவேசமாக கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது தமிழ் நாட்டில் இதற்கு தகுதியானவர்கள் இல்லையா? எனும் கேள்வியை நாம் தாம் எழுப்பினோம். அந்த கேள்வி இப்பொழுதும் தொற்றி நிற்கிறது. அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஆனால் வந்தவரோ வளைந்து கொடுக்காதவர், அதிகாரத்திற்கு நெளிந்து கொடுக்காதவர். தமிழக பொறியியல் கல்வியை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என நினைத்தவர். பொறுப்பாளர்களா நம் ஊழல் திலகங்கள்?

வளைந்து கொடுக்கவில்லை என்றால் ஒடிப்பது தானே இவர்கள் வழக்கம். எவனோ அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணை குழு அமைத்து இருக்கின்றார்கள். கொட்டையில் முடி வளராத தால் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என கடை போட்டு காத்திருக்கிறார்கள்.

முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும் பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்திவர்களையும் விசாரித்து விட்டீர்களா? உயர்கல்வித்துறை அமைச்சர் 60 லட்சம் வாங்கிக் கொண்டுதான் பேர் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என்று திரு பாலகுருசாமி ஜூனியர் விகடன் இதழில் குற்றம்சாட்டினார். விசாரித்து விட்டீர்களா? உள்ளாட்சித்துறை கால்நடை பராமரிப்புத்துறை மக்கள் நல்வாழ்வுத்துறை பால்வளத்துறை என அத்தனை துறையின் அமைச்சர்களும் ஊழலில் திளைக்கின்றார்கள் என்று சமூக செயல்பாட்டாளர்களும், ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்கள் அதை விசாரித்து விட்டீர்களா?

தேர்வு நடத்துவதும் தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை. கரை வேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்? இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் இப்போது மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வாங்க நினைக்கிறார்களா? சூரப்பாவின் கொள்கை சார்பில் அரசியல் நிலைபாடுகள் மீது நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்படும்போது கமல்ஹாசன் ஆகிய நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதி மய்யம் சும்மா இருக்காது.

இது ஒரு கல்வியாளருக்கும் அரசியல்வாதிகளுக்குமான பிரச்சனை இல்லை. நேர்மையாக வாழ நினைப்பவர்களுக்கும் ஊழல் பேர்வழிகளுக்குமான பிரச்சனை. ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்வை அழித்து, அவதூறு பரப்பி உன் அடையாளத்தை சிதைப்பேன் என்று சூரப்பாவிற்கும் அவர் போல் நேர்மையுடன் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை. சகாயம் தொடங்கி சந்தோஷ் பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்கள் பட்டியல் பல. நேர்மையான அதிகாரிகளே இவர்களோடு போராடி களைத்து விருப்ப ஓய்வு பெறுகிறார்கள் என்றால் சாமானியனின் கதி என்ன?

இதை இனிமேலும் தொடரக்கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கே உருவாகக்கூடாது. நேர்மைக்கும் ஊழலுக்குமான மோதலில் அரசின் பக்கம் இருக்க விரும்புபவர்கள் தங்கள் மவுனம் கலைத்து பேசியாக வேண்டும். அவர்களின் குரலாக நாம்தான் மாறவேண்டும். நேர்மைதான் நம் ஒரே சொத்து. வாய்மையே வெல்லும். நாளை நமதே.

இவ்வாறு கமலஹாசன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.