அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது, விரைவில் தீர்ப்பு: கமல்ஹாசன் 

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று சில மணி நேரத்திற்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மது வாங்க வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுக்கடைகள் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது குறித்து கடந்த சில மணி நேரங்களுக்கு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது இதுகுறித்து மேலும் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது’ என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த இரண்டு டுவிட்டுக்களுக்கும் கமெண்ட்டுக்கள், லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.