விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோ இல்லாத அரசு: கமல்ஹாசன் காட்டம்

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு என்று நேற்று மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

தமிழக அரசை விமர்சனம் செய்யும் செய்தி ஊடகங்களுக்கு மறைமுகமாக தமிழக அரசு இடைஞ்சல் செய்து வருவதாகவும், இதற்காகவே சில செய்தி சேனல்கள் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அரசை விமர்சனம் செய்யும் ஊடகங்களை பழிவாங்கும் இந்த அரசு, விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசாக இருப்பதாக கமல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும்கூட நிலைக்க வாய்ப்பில்லை. இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சியங்களில் ஒன்று' என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கும் வழக்கம்போல் நெட்டிசன்களிடம் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.