புரட்சிக் களம் அழைத்தால் வருவேன்: தூத்துக்குடி மக்களுக்கு கமல்ஹாசனின் அறிவிப்பு
- IndiaGlitz, [Sunday,March 25 2018]
கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.
ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் ஆலையையே மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆலையின் ஒப்பந்தத்தை நீடிக்கவும், விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் இந்த ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள திமுக, மதிமுக உள்பட பல கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் போராட்டக்களத்தில் குதிக்கவும் தயார் என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.
ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2018