ஆபத்து.. இன்றே கடைசி.. உடனே செயல்படுங்கள்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,December 17 2022]

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு ஆபத்து என்றும் இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இன்று கடைசி தினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது; ஒரு நாட்டில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்றால் நாட்டு குடிமக்கள் அனைத்து விஷயத்திலும் பங்கேற்க வேண்டியது அவசியமாகும். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மீதான கொடூர தாக்குதல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று நான் நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்த மசோதா மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இன்று கடைசி நாள். எனவே அனைத்து மக்களும் இது குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்கும் விதமாக இருப்பதாகவும் ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மை மீதான நம்பிக்கையை இந்த மசோதா பாதிக்கும் என்றும் புதிய மசோதா நடைமுறைக்கு வந்தால் பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் நிராகரிக்க அரசு தரப்புக்கு அனுமதி கிடைக்கும் என்றும் எந்த ஒரு தனி நபருக்கும் தகவலை வழங்க மறுக்கக் கூடாது என்பதே அடிப்படை உரிமை என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பல்வேறு உண்மைகள் மற்றும் ஊழலை அறிந்து கொள்ளவும் உலகிற்கு அம்பலப்படுத்தவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருக்கிறது என்றும் இதில் உள்ள முக்கிய பிரிவை நீக்கிவிட்டால் பல உண்மைகள் வெளியே வராத நிலை ஏற்படும் என்றும் இது குறித்து கருத்து தெரிவிக்க இன்று கடைசி நாள் என்பதால் இந்த மசோதா மீதான தங்கள் கருத்தை பொதுமக்கள் அனைவரும் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.