இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Tuesday,September 14 2021]
நீட் தேர்வுக்கு முன்னர் தனுஷ் என்ற மாணவரும், நீட் தேர்வுக்கு பின்னர் கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டது குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன் அவர்கள் ’இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு, சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் ’என்று பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் நீட்தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. அதேபோல் இன்று நீட் தேர்வுக்கு பின்னர் அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரண்டு தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது: ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்.
முன்னதாக நீட் தேர்வு நடைபெறும் தேதியில் ’இது ஒரு அநீதியான தேர்வு என்றும் ஒரு 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் இந்த தேர்வை எதிர் கொள்கிறார்கள் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்கள் பற்றி இவர்கள் எண்ணம் என்னவாக இருக்கும் என்றும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
— Kamal Haasan (@ikamalhaasan) September 14, 2021