ஆர்ப்பாட்டமான மக்களின் வரவேற்பும், அசிங்கமான அரசின் வரவேற்பும்: கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று முதல் தனது 5வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். கோவை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று முதல் வரும் வியாழன் வரை அவர் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருகையை அடுத்து அக்கட்சியின் கொடிகள் கோவையின் பல சாலைகளில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கொடிகளை இன்று காலை போலீசார் அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ? என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் இன்னொரு டுவீட்டில், ‘காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே.. என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் கொடியை அகற்றும் அகற்றும் அக்கறையில் சிறிதேனும் மக்களின் நல திட்டங்களிலும் அரசு காண்பிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார்.