வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, கொள்ளையரையும் வெளியேற்றும் காலம் நெருங்கிவிட்டது: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்றும் அதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான்.
பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா”? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது?
இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்கு போகும், பின் அரசு நடத்தும் சாராய கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ் நாட்டை ஆள்பவர்களுக்கு.
ஓட்டுக்கு இத்தனை ஆயிரம், விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் என 5 வருடத்திற்கு ஏழைத் தமிழர்களை குத்தகைக்கு எடுத்த அரசு, இன்று ஆட்சி கவிழும் தருவாயில் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது. ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.
இன்று சொல்லுகிறேன்.....
இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும்.
அப்படி எதுவும் நடந்தால், தமிழகத்தின் தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது? சிறைக்கு அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம், கொரோனாவை விட அதிக தமிழ்
மக்களைக் கொல்லும்.
நோய் தொற்றிற்கு தப்லிக் ஜாமாத்தை மட்டும் காரணம் காட்டிய பலர், கோயம்பேடு, நோய் விநியோக நிலையமாக மாறியதற்கு, ஆளும் அரசியல் வியாபாரிகளைத் தவிர, வேறு யாரைக் குற்றம் சாட்ட முடியும். கிராமங்களெங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக்கூட்டம். கொள்ளை நோய் ஒரு பக்கம், அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம். தாங்குமா தமிழகம் ? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு. வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, இந்த கொள்ளையரையும் வெளியேற்றும் காலம் நெருங்கிவிட்டது
அரசுக்கு ஒரு சிறுகுறிப்பு:
இன்றும் தாமதமாகி விடவில்லை. நேர்மை குரல்களுக்கு செவி சாய்த்தால், மக்களுக்கு இருக்கும் நியாயமான கேள்விகளுக்கு, நேர்மையான பதிலை இந்த அரசு அளித்தால், நடக்கும் இந்த ஆட்சியின் முடிவு, அசிங்கமானதாக இல்லாமல் தப்பிக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது . உண்மையில் இது யாருக்கான அரசோ?
இது வரை கிடைத்த தடையங்களை பார்க்கையில் மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால் அதை தொட்டுச் சொல்லுங்கள். இல்லையேல் மேலிடத்தில்
கேட்டுச் சொல்லுங்கள்
தமிழர்களுக்கு ஒரு கடிதம். #தாங்குமாதமிழகம்? pic.twitter.com/SHZsXEB5zZ
— Kamal Haasan (@ikamalhaasan) May 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments