பிரபல காமெடி நடிகருக்காக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக இருந்த நாகேஷ் அவர்களுக்கு உரிய கவுரவத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும் என உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நாகேஷின் பிறந்த நாளான இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ், இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களுள் ஒருவர். 1,000 திரைப்படங்களுக்கும்மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.
1958-ல் “மனமுள்ள மறுதார'த்தில் அறிமுகமாகி 2008-ல் “தசாவதாரம்' வரை மிகச் சரியாக அரை நூற்றாண்டு நீடித்தது அவரது கலைப்பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதோ, விருதுகள் அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.
1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் “நம்மவர்' திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலைவாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொருத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். இவர் ஃப்ரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் இவருக்கான கெளரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை பூகித்துப்பார்க்கிறேன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும்கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது, ஒரு சககலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தையளிக்கிறது.
இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். pic.twitter.com/rLAVf1bMxO
— Kamal Haasan (@ikamalhaasan) September 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout