அரசியல் கட்சி அறிவிக்கும் தேதி அறிவிப்பு: கமல்ஹாசன் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டதாக ஏற்கனவே உறுதி செய்த நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகவும், சுற்றுப்பயண திட்ட விபரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழாவின்போது தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்றுப்பயண விபரங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கும் தேதியையும் அவர் அறிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன.
அக்கடமைகளின் தொடக்கமாய் எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொடங்கஇருக்கிறேன். ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.
இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21-ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை தொடக்க இருக்கிறேன். இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று. பின்பற்றவே தலைவன் இருக்கவேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்கவேண்டும்.
நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். 'இது ஆட்சியைப் பிடிப்பதற்கானத் திட்டமா?' என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு, குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்தவேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்தவேண்டும். அதைநோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்'
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com