சரித்திரம் படித்திருந்தால் இதெல்லாம் புரிந்திருக்கும்: விவசாயிகளுக்கு ஆதரவாக கமல்ஹாசன் அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்கபூர்வமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிறுத்தப்படுவது குறித்த தகவல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
உலகமே பசுமை விவசாயத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக விவசாயிகளை 8 வழிச்சாலை, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன், கொள்முதல் விலை, கடன் பிரச்சினை, மின்சார சட்டதிருத்த மசோதா - 2020 என போராடிக் கொண்டேயிருக்கும் நிலையில் வைத்திருப்பது யார் தவறு?
விவசாயிகளுக்கு எதிராக புது சட்ட திருத்தங்கள் வருகிறது என கவலையும், பயமும் அவர்களிடம் அதிகம் இருக்கிறது. வெற்று நிலத்தை விளைநிலமாக்கி, உணவும், உடையும், பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் கட்டமைக்கும் விவசாயிகள் தான் நம் பலம், நலம், எதிர்காலம் எல்லாம். அதை நாம் பல முறை உறுதி படுத்தி கொண்டே இருக்கிறோம்.
மின்சார சட்ட திருத்த மசோதா - 2020, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை குறிவைக்கிறது. பல்லாண்டு போராட்டங்களுக்கு பின் விளைவிப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் உதவி இலவச மின்சாரம். கடந்த 4 வருடங்களாக புதிய இணைப்புக்களை வழங்காமல், தட்கல் முறையில் மட்டுமே 4இலட்சம் ரூபாய் கட்டி, புதிய இணைப்பு எடுக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மூலப்பொருட்கள் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, நிலையில்லா கொள்முதல் விலை என ஏற்கனவே பலமுனைகளில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் மேல் இந்தச் சுமையையும் ஏற்றத் துடிக்கிறது
இந்த அரசு.
இலாபகரமாக அரசை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அதைச் சரிசெய்ய வழிகளைக் கண்டறிய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிறு உதவியை உங்களின் நிர்வாகத்திறமை இன்மையால் நிறுத்தி விடாதீர்கள். விவசாயிகளை வஞ்சித்த தேசங்களின் நிலை என்ன என்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும்.
விளைவிப்பவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அதிகப்படுத்தாமல், அவர்களை சிரமத்தில் ஆழ்த்தும் மின்சார சட்ட திருத்த மசோதா - 2020ஐ திரும்ப பெற வேண்டும். பெயரளவில் பாதிப்புக்கள் வராது என அறிவிக்காமல் அதை அரசு உத்தரவாக செயல்படுத்த வேண்டும்.
பொருள் ஈட்டும் உங்கள் போட்டியில் விவசாயிகளை பகடைக் காய் ஆக்காதீர்கள். விவசாயிகளுக்காக, அவர்களது உரிமையை பாதுகாக்க, எம் குரலும் ஓயாது ஒலிக்கும்.
Press Release - Condemning Electricity (Amendment) Bill 2020.#PressRelease#MakkalNeedhiMaiam pic.twitter.com/ou5Bl6vEst
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments