சென்னையில் மட்டும் பரிசோதனை ஏன்? பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்துதா? கமல்ஹாசன் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே பரிசோதனை செய்து பிற மாவட்டங்களில் பரிசோதனையே செய்யாமல், கொரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்வது, பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்தும் செயல் என்பதை உணர்ந்து எப்போது செயல்படப்போகிறது இந்த அரசு? என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
மார்ச் 24ஆம் தேதி தொடங்கியது இந்த ஒத்துழைப்பு இயக்கம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று தொடங்கியிருக்கும் முழு அடைப்பிற்கு முன், கொரோனாவில் இருந்து தப்பிக்க சொந்த ஊருக்கு, இரு சக்கர வாகனங்களில் கூட செல்லத் துணிந்து விட்ட மக்களை பார்க்கும் பொழுது என் மனதில் எழும் கேள்விகள் இவை.
வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் இந்த வியாதி பரவுகிறது எனும் நிலையில், விமான நிலையத்திலேயே அவர்களுக்கு பரிசோதனைகளை செய்திருந்தால் இத்தனை நீண்ட நெடிய ஊரடங்கினை நாம் எதிர்கொள்ள வேண்டியது இருந்திருக்காது. உங்களின் அந்த ஒரு தவறுக்காக ஒட்டு மொத்த தமிழகமும் 68 நாட்கள் ஊரடங்கில் இருந்து, இப்போது தான் மெதுவாக மீளத் தொடங்கியிருக்கிறது.
"முன்பிருந்த நிலை" என்பதை அடைவதற்கே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் விவாதித்து கொண்டிருக்கின்றனர். பல ஆண்டுகள் நம் பொருளாதார நிலையை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது இந்த நுண்ணுயிரி.
சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் பரிசோதனையே செய்யாமல், கொரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்வது, பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்தும் செயல் என்பதை உணர்ந்து எப்போது செயல்படப்போகிறது இந்த அரசு?
பரவலான பரிசோதனையை எல்லா மாவட்டத்திலும் செய்து, உண்மை நிலையை தெளிவுபடுத்தியிருந்தால், கொரோனாவிலிருந்து தப்பிக்க, சென்னையை விட்டு வெளியேறினால் போதும் என்ற மக்களின் மனநிலையையும், காவல் துறை சோதனை சாவடிகள் அமைத்து தடுக்கும் நிலையினையும் தவிர்த்திருக்கலாம். இதை எதையுமே செய்யாமல் ஊர் பெயர்களை மாற்றி, பின் அதை திரும்பபெற்று என செயலாடிக் கொண்டிருக்கிறது அரசு.
83 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் சென்னையில், மீண்டும் ஒரு முழு ஊரடங்கு என அறிவித்திருந்தார் முதல்வர். ஏற்கனவே சற்றே தளர்த்தப்பட்ட ஊரடங்கில் இருக்கும் சென்னைக்கு எப்படி மறுபடியும் ஊரடங்கு என்பதைக் கூட யோசிக்காமல் அறிவிக்கும் முதல்வரும், அமைச்சர்களும் தான் நம்மை காப்பதற்கான பொறுப்பில் இருப்பவர்கள். "ஊரடங்கிற்குள் இன்னொரு ஊரடங்கு" என ஏற்கனவே அறிவித்து மக்களை பயமுறுத்தி, கோயம்பேடு தொற்றினை உருவாக்கினார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு செய்த தவறில் இருந்து கூட பாடம் கற்காமல் மீண்டும் அதே தவறைச் செய்கிறார்கள்.
மக்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுவதால் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. "அத்தியாவசிய பொருட்களின் இருப்பும், விநியோகமும் உறுதி செய்யப்படும்" என்கின்ற உறுதிகள் வழங்கப்பட்டாலும் கூட மக்கள் கண்டிப்பாக பதட்டம் அடைவார்கள் என்ற முன்யோசனையின்றி செயல்படுவது ஏன்? ஊரடங்கு என்பது தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சி தான். ஆனால் ஏற்கனவே இருக்கும் தொற்றினைக் கட்டுப்படுத்த பரவலான பரிசோதனை முக்கியம் என்று அறிஞர்கள் சொன்ன போதெல்லாம், அதைக் காதில் வாங்காமல் 300,400 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்ததின் விளைவு, இன்று இந்த பொது முடக்கமும், அதன் விளைவாக பொருளாதார முடக்கமும்.
மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து வென்றெடுப்பதற்கு, நேர்மையாக தகவல்களை பரிமாறாமல், வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதன் விளைவே, ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த முழு ஊரடங்கு காலத்திலாவது, மக்கள் உள்ளிருக்கும் போது அரசு என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதையும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை.
இதை ஒரு கட்சியின் தலைவராக கேட்கவில்லை. அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்த, ஒத்துழைக்கின்ற, அரசின் உத்தரவுகளை மதிக்கும், ஒரு சாமானியனாகக் கேட்கிறேன். அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com