வட இந்தியாவுக்கும் பிரச்சாரம் செய்ய செல்கிறாரா கமல்ஹாசன்? அப்ப 'தக்லைஃப்' படப்பிடிப்பு?

  • IndiaGlitz, [Wednesday,May 08 2024]

உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் திமுக கூட்டணிக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார் என்பதும் அந்த கூட்டணியில் அவருக்கு ஒரு தொகுதி கூட வழங்கப்படவில்லை என்றாலும் அவர் அந்த கூட்டணியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் காரணமாக ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில வாரங்களாக கமல்ஹாசன் கலந்து கொள்ளாத நிலையில் அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பை மணிரத்னம் படம் எடுத்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் டெல்லி படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் அதில் கமல்ஹாசன் உடன் சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது ‘தக்லைஃப்’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் ’இந்தியன் 2’ படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வட இந்தியாவுக்கு செல்வீர்களா என்று கேட்ட கேள்விக்கு ’தேவை இருந்தால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்’ என்று கூறியுள்ளார். மேலும் ’உத்தம வில்லன்’ திரைப்படம் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்காக வட இந்தியாவில் பிரச்சாரம் செய்வேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளதை அடுத்து ‘தக்லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.