இந்தியாவை தமிழன் ஆளும் நாள்.. உதயநிதியால் தான் அடுத்த கட்டம்.. 'இந்தியன் 2' விழாவில் கமல்..!
- IndiaGlitz, [Sunday,June 02 2024]
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் பேசியபோது ’இந்தியன் 2’ படம் சிக்கலில் இருந்து இரண்டு மூன்று வருடங்களாக நகராமல் இருந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்ததால் தான் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது என்று தெரிவித்தார்.
மேலும் ’எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்து இருக்கிறார்கள், அந்த பொறுப்பில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். எங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்தது போல் அவரோடு நாங்களும் உறுதுணையாக நிற்க வேண்டிய சூழல் வரும்’ என்றும் கமல்ஹாசன் பேசினார்.
மேலும் ’தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது என்ற கேள்வி எழுப்பிய கமல்ஹாசன் ஆசிய கண்டத்தில் ஒரு பெண்மணியை பிரதமர் ஆக்கி பார்த்தவர்கள் நாம், இதையும் செய்து காட்டுவோம்’ என்றும் தெரிவித்தார்.
’இந்தியன் 2’ இசை நிகழ்ச்சியில் இதை ஏன் பேசுகிறார் என்று சிலர் கேட்பார்கள், நான் பேசுவேன் என்று கூறிய கமல், இது என் நாடு, இந்த நாட்டின் ஒற்றுமையை காக்க வேண்டியது நம் கடமை’ என்றும் ஆவேசமாக பேசினார். கமல்ஹாசனின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.