மதுவிலக்கை அமல்படுத்தினால் மாஃபியா பெருகிவிடும்: கமல் சர்ச்சை பேச்சு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மதுவினால் பல தாய்மார்களின் தாலி பறிபோவதால் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் நாளுக்கு நாள் ஓங்கி ஒலித்து வருகிறது. தமிழகத்திலும் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க போவதாக அதிமுகவும் திமுகவும் கடந்த பல வருடங்களாக வாக்குறுதி அளித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்ய்ம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. என்றும், மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும் என்றும் அதனால் கொலை, கொள்ளை என மாஃபியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்றும் பேசினார்.

மேலும் மது வேண்டாம் என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீங்கள் மதுவை விலக்கினால் தானாகவே மதுக்கடைகள் மூடப்பட்டுவிடும் என்றும் தமிழகத்தில் மூக்கு பொடி போடுபவர்கள் தானாகவே திருந்தியது போல் மதுவுக்கு அடிமையானவர்கள் திருந்தினால் மதுவிலக்கை அமல்படுத்தாமலேயே மதுக்கடைகள் மூடப்பட்டுவிடும் என்றும் பேசினார். கமல்ஹாசனின் இந்த பேச்சு சர்ச்சையாக ஒருசிலராலும், புத்திசாலித்தனமாக ஒருசிலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.