ரசிகர்களுக்கு இளையராஜா-கமல் தந்த இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,February 29 2016]

கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்று 'மருதநாயகம்' என்று ஏற்கனவே அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் தொடங்கி வைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு பட்ஜெட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் உயிர்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் சமீபத்தில் நடந்த இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பாடப்பட்டது. இந்த பாடலை இளையராஜாவும் கமல்ஹாசனும் இணைந்து பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்த பாடலை பாடி முடித்ததும் கைதட்டல் ஓசை நிற்க ஒருசில நிமிடங்கள் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் வரிகள் இதோ உங்களுக்காக:

தாந்ததன்ன தாந்தன்ன தானா - தன
தாந்தன்ன தாந்தன்ன தாந்தன்ன தானா..
பொறந்தது பனையூரு மண்ணு – மருத
நாயகம் என்பது பேர்களில் ஒண்ணு
வளர்ந்தது பகையோட நின்னு – இங்கு
தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒண்ணு
மதம்கொண்டு வந்தது சாதி – இன்றும்
மனுசனத் தொரத்துது மனுசொன்ன நீதி
சித்தங்கலங்குது சாமி - இது
ரத்தவெறி கொண்டு ஆடுற பூமி
(பொறந்தது..)

முப்புறம் எரிச்ச செவனே – இங்கு
எப்புறம் போனாலும் எரிவது என்னே
சாதிக்கோர் சமயம் சொல்வானே – தக்க
சமயத்தில் காக்கும் ஓர் சாதிசொல்வானா
இடப்பாகம் இருந்த நல்லாளை – கயவர்
இடுகாட்டுச் சோறாக்கி உலரவிட்டாரே
கண்ணீரில் நனையாத பூமி
யாரும் கண்ணில் காணத்தகுமோ
அது காணும் காலம் வருமோ

மதம்கொண்டு வந்தது சாதி – இன்றும்
மனுசனத் தொரத்துது மனுசொன்ன நீதி
சித்தங்கலங்குது சாமி - இது
ரத்தவெறி கொண்டு ஆடுற பூமி
(பொறந்தது)