மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்: 'இந்தியன் 2' அரிய புகைப்படத்தை வெளியிட்ட கமல்!

  • IndiaGlitz, [Thursday,December 15 2022]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் இந்த படம் குறித்து கூறியபோது, ‘கமல்ஹாசன் அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்புக்கு தயாராகி விடுவார் என்றும், அவர் இந்த படத்தில் 90 வயது கேரக்டரில் நடித்திருப்பதாகவும் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு குறித்த அரிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் சிலைக்கு முன் கமலஹாசன் புகைப்படம் எடுப்பது போல் இந்த ஒரு புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த சிலை கடந்த 1997ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.