ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Thursday,October 06 2022]
ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயற்சி செய்கிறார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்த நிலையில் அந்த கருத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது என உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ சிறப்பு காட்சி உலக நாயகன் கமல்ஹாசனுக்காக திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, ‘ ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது என்றும் சைவம், வைணவம், சமணம் ஆகிய சமயங்கள் தான் இருந்தன என்றும் இந்து மதம் என்பது வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் என்றும் தெரிவித்துள்ளார்.
கிபி 8ஆம் நூற்றாண்டில் மதங்கள் வெவ்வேறாக இருந்தது என்றும் ஆதிசங்கரர் தான் ஷண்மத ஸ்தாபனம் என்ற அமைப்பை கொண்டு வந்தார் என்றும் இவை எல்லாம் வரலாற்றில் இருக்கும் உண்மைகள் என்றும் தெரிவித்தார்.
மேலும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு என்றும் இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம் என்றும் திரிக்கவும் வேண்டாம் என்றும் கேள்வி ஒன்றுக்கு கமல்ஹாசன் கூறினார்.
மேலும் சினிமாவில் மொழி அரசியல் ஆகியவற்றை திணிக்க வேண்டாம் என்பதே எனது கருத்து என்றும் நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.