'குணா' குகையில் கண்டெடுத்ததை 'ஹேராம்' படத்தில் பயன்படுத்தினேன்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Monday,March 04 2024]

’குணா’ குகையில் கண்டெடுத்த 3 குரங்கு எலும்புக்கூடுகளை ‘ஹேராம்’ படத்தில் பயன்படுத்தினேன் என கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’குணா’ திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 33 வருடங்கள் கழித்து தற்போது இந்த படம் திடீரென டிரெண்டுக்கு வந்துள்ளது. சமீபத்தில் வெளியான ’மஞ்சும்மள் பாய்ஸ்’ என்ற படத்தில் ’குணா’ படத்தின் ரெஃபரன்ஸ் இருந்ததை அடுத்து திடீரென ’குணா’ படம் டிரெண்டுக்கு வந்துள்ளது என்பதும் இந்த படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என கமல் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ’மஞ்சும்மள் பாய்ஸ்’ படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்த போது அவர் சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறினார். குணா குகை மிகவும் ஆபத்தானது என்றும் அந்த குகையில் விழுந்தவர்கள் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்றும் அவ்வாறு சில குரங்குகள் அந்த குகையில் விழுந்து உயிரிழந்த நிலையில் அந்த குரங்குகளின் மண்டை ஓடுகள் எனக்கு கிடைத்தது என்றும் அதைத்தான் நான் ’ஹேராம்’ படத்தில் பயன்படுத்தினேன்’ என்றும் கூறியுள்ளார்.

‘ஹேராம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஷாருக்கான் இடையிலான காட்சியில் மூன்று குரங்கு பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த மூன்று குரங்கு பொம்மைகள் ’குணா’ படத்தில் இருந்து எடுத்தது தான் என கமல்ஹாசன் கூறியது தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ’மஞ்சும்மள் பாய்ஸ்’ தமிழில் டப்பிங் செய்யாமல் தமிழகத்தில் மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் நூறு கோடி ரூபாயை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.