49 பேர்கள் மீதான தேசத்துரோக வழக்கு: ஒரு குடிமகனாக கமலின் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Tuesday,October 08 2019]

மணிரத்னம், ரேவதி உள்பட 49 பேர் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ‘சிறுபான்மையினர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருவதை நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த கடிதம் குறித்து பீகார் வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த வழக்கில் கடிதம் எழுதி கையெழுத்திட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதுகுறித்து பல அரசியல் தலைவர்கள், திரையுலகினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும். பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை விரும்புகிறார் என்பதை அவரது நாடாளுமன்ற அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இதனை அரசாங்கமும் சட்டமும் பின்பற்ற வேண்டாமா? எனது சகோதரர்கள் 49 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்துடனும், நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக கேட்டுக்கொள்கிறேன் என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.