கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினி? கமல்ஹாசன் பதில்

  • IndiaGlitz, [Monday,December 28 2020]

கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினிகாந்த் என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் அதிரடி பதிலை கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை எடுத்து கொண்ட நிலையில் அவர் ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவரது அரசியல் அறிவிப்பு வெளியாக தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது திருச்சி பகுதியில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சி தொடங்குவதற்கு நாடகமாடுகிறாரா ரஜினிகாந்த்? என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் ’40 ஆண்டு கால நண்பருக்கு முதலில் உடல் நலம் தான் முக்கியம். பிறகுதான் அவர் அரசியல் தொடர்பான பணிகளை தொடர்வார் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை தாமதப்படுத்த உடல்நலக் குறைவு என்ற நாடகமாடுகிறார் என்று ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வந்தாலும் டிசம்பர் 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.