தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் கிடைத்தும் மகிழ முடியவில்லை: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Wednesday,July 07 2021]
தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தும் மகிழ முடியவில்லை என உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை சற்று முன் விரிவுபடுத்தப்பட்டது என்பதும் 43 புதிய அமைச்சர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த யாரும் மத்திய அமைச்சர்களாக இல்லாத நிலையில் அந்த குறையை தீர்க்கும் வகையில் தற்போது ஒருவர் தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது குறித்து மனம் மகிழ முடியவில்லை என்றும் கமல்ஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன!’ என்று பதிவு செய்துள்ளார்.
தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) July 7, 2021