ரசனைக் குறைபாடுள்ளவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.. ஒரு சிலருக்கு எச்சரிக்கை.. கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து கூறியிருப்பதாவது:
'கொட்டுக்காளி' என்ற மத்திய அரசு சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பைப் பார்த்ததுமே தமிழ் சினிமா ராக்கூத்து யுகத்திலிருந்து மீண்டு நவீன கதைசொல்லி ஒருவனின் களமாகிவிட்டது புரிகிறது.
தம்பி சூரி தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை, பாண்டியன் எனும் கதாபாத்திரம் தான் தெரிந்தார். காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காக கூட கூவாமல் குழம்பி நிற்கிறது. மறுபுறம் நம் கண்ணுக்குத் தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்தச் சேவலையே வெறித்துப் பார்க்கிறாள். 'கொட்டுக்காளி டைட்டில் திரையில்.
கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறித் தப்பிக்கிறது சேவல். வெறித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு. பின் இரு உறவினர்கள் சேவலை துரத்திப் பிடித்து கொண்டு போகிறார்கள். பெண்ணின் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள்தான் நாயகி.
உலகத்தை தலைகீழாக அண்ணாந்து பார்த்தபடி அறிமுகமாகிறான் பாண்டி, அவன் கழுத்தில் ஒரு வெண்சுண்ணாம்புக் களியைத் தடவி விடுகிறாள் ஒரு பெண். பாண்டிக்குத் தொண்டைக் கட்டாகவும் இருக்கலாம் அல்லது புற்றுநோயின் ஆரம்பக் கட்டமாகக்கூட இருக்கலாம். ஓர் இளம்பெண்ணின் கல்லூரிக் காதலையும் கேன்ஸரையும் எந்த ஒரு புரிதலும் இல்லாது அணுகும் ஒரு கிராமத்துக் குடும்பம்.
கிராமம் என்றால், சிமெண்ட் சாலை, வாகன வசதி, செல்போன், டாஸ்மாக், சானிட்டரி நாப்கின், 24 மணி நேர மின்சாரம் என 21-ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம். இருப்பினும் 'எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு. பேய் ஓட்ட கூட்டிப்போறோம்' என்று விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன். வழிமொழிகிறது குடும்பம்.
போகிற வழியெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடி செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் பேயாடுகிறது. நடுவழியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய்கள் எனப் புரிந்து கொள்கிறோம்.
இது பேய்க் கதைதான். காதல் பேய்க் கதை. நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை. டைட்டில் கார்டில் வரும் 'இயற்கைக்கு நன்றி' என்ற வாசகத்தின் பொருள், ஒளிப்பதிவிலும் ஒலிப்பதிவிலும் தெரிகிறது. இயற்கைதான் படத்தின் இசை.
குலதெய்வக் கோயிலை நெருங்குகையில் சிறுவன் கார்த்திக் வாயால் கொடுக்கும் சினிமா பாணி பின்னணி இசைதான் ஒரு சின்னக் கிண்டலுடன் இந்தப் படத்தில் அவை இல்லை என்பதை நினைவுபடுத்துகிறது. ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம், காலம் மாறிவிட்டதை மற்ற பாத்திரங்கள் புரிந்துகொள்ளாவிடினும் பிடித்துக் காட்டப்படுகிறது.
கடைசியில் இயக்குனர், பாண்டியனையும் நம்மையும் பகுத்தறிவின் கரையோரமாகவும் மனிதத்தின் விளிம்பிலும் நிறுத்திவிட்டு, தன்னுடைய கடமை முடிந்த சந்தோசத்தில் விளக்கை அணைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். இந்தக் காதல் கதையின் முடிவை பாண்டியனைப் போலவே நாமும் உணர உந்தப்படுகிறோம்.
இது ‘கொட்டுக்காளி’ படத்தின் விமர்சனம் அல்ல. இனி இது போன்ற நல்ல சினிமாக்களும் தமிழில் அடிக்கடி வரும் எனக் கூறும் கட்டியம். ஒரு சிலருக்கு எச்சரிக்கை. ரசனைக் குறைபாடுள்ளவர்கள் தம்மை விரைவில் மேம்படுத்திக் கொள்ளாவிடில் நல்ல நவீன சினிமாவின் நீரோட்டத்தில் கலக்க முடியாது. கரையிலேயே நின்றபடி தண்ணீரை அசுத்தப்படுத்தாமல் அவர்கள் தங்கள் தாகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
மொத்தத்தில் ‘கொட்டுக்காளி’ குழுவினர் அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை ஒன்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக இயற்கைக்கு மட்டுமல்ல சிவகார்த்திகேயனுக்கும் நன்றி.
சாளரமல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய படைப்பாளர்களும் பல்கி விட்டார்கள். பார்வையாளர்களும். ஜெய் சினிமா!” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
We are incredibly honored and moved by @ikamalhaasan Sir watching #Kottukkaali. His generous praise and heartfelt letter of appreciation have truly inspired us. Receiving recognition from such a legend is a moment we will treasure forever. Thank you, Sir, for your encouragement… pic.twitter.com/lhJf5qnePs
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) August 21, 2024
We deeply cherish this moment with you, @ikamalhaasan Sir. ❤️❤️❤️#Kottukkaali #KottukkaaliFromAug23 @Siva_Kartikeyan @KalaiArasu_ @sooriofficial @PsVinothraj #AnnaBen @sakthidreamer @thecutsmaker @valentino_suren @alagiakoothan @Raghav4sound @promoworkstudio @kabilanchelliah… pic.twitter.com/KC3hyvP1jn
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) August 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments