ரூ.100 கோடி படமா இருந்தாலும் நல்லா இல்லைன்னா, நல்லா இல்லைன்னு சொல்லுங்க: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,October 28 2022]
ஒரு திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை என்று தைரியமாக விமர்சனம் செய்யுங்கள் என்று உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் நடிப்பில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’செம்பி’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு படம் நன்றாக இருந்தால் அந்த படத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்வது போல் ஒரு படம் நன்றாக இல்லை என்றால் அந்த படம் நன்றாக இல்லை என்று தைரியமாக சொல்ல வேண்டும். அது எத்தனை கோடி பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி! ரசிகர்கள் வெளிப்படையாக தங்கள் விமர்சனத்தை சொல்லவேண்டும். ரசனையை வளர்ப்பது என்னுடைய கடமையாக நினைக்கிறேன் என்று பேசினார்.
‘சதிலீலாவதி’ படத்தில் எனக்கு குருவாக கோவை சரளா இருந்தார். அதேபோல் ’தசாவதாரம்’ படத்தின் ஒரு காட்சிக்கு என்னுடைய குருவாக என்னுடைய மகள் இருந்தார். யாரிடமிருந்தும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து இயக்குனர் பிரபு சாலமன் பேசியபோது, ‘ஒரு கலைஞனை உருவாக்கும் நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார். அவரை பற்றி பேச வார்த்தையே இல்லை. நடிகர் அஸ்வினை இந்த படம் ஒரு சரியான தளத்திற்கு கொண்டு போகும் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.