பேனர் வழக்கில் நீதி தாமதமாக கிடைத்துள்ளது: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,September 27 2019]
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள பேனர் விழுந்ததால் தடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேனர் அச்சடித்த அச்சகத்தை சீல் வைத்தது. லாரி டிரைவரையும் கைது செய்தது. ஆனால் பேனர் வைக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவரை மட்டும் கைது செய்யாமல் இருந்தது
இதற்கு அரசியல் கட்சிகளும் நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இதனையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டார்
இந்த நிலையில் பேனர் வழக்கில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளது நிம்மதி அளிப்பதாகவும் ஆனாலும் நீதி தாமதமாக கிடைத்துள்ளதாகவும் உலக நாயகனும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
அதேபோல் பேனர் வழக்கில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிப்பதாகவும், இந்த வழக்கில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து நீதி பெற்று தருவார்கள் என நம்புவதாகவும் சுபஸ்ரீ பெற்றோர் பேட்டி அளித்துள்ளனர்.