பூரண மதுவிலக்கு குறித்து கமல்ஹாசனின் வித்தியாசமான கருத்து
- IndiaGlitz, [Thursday,March 01 2018]
தற்போதைய தமிழக அரசின் முக்கிய வருமானம் டாஸ்மாக் தான். மதுவை ஒழிப்போம், பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கொள்கையாக வைத்திருந்தாலும் கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் பூரண மதுவிலக்கு என்பது ஒருசில ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளது. பொதுமக்களும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தாலும் டாஸ்மாக் கடைகளில் வரிசையில் நின்று மதுவாங்கும் நிலைமைதான் உள்ளது.
இந்த நிலையில் மதுவிலக்கு குறித்து தனது கருத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சற்றுமுன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பூரண மதுவிலக்கு கொள்கைக்கு நான் ஆதரவு தரமாட்டேன். ஏனெனில் நான் விரும்பும் மதுவை என்னால் விட முடியவில்லை என்பதே உண்மை. ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது; அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் பல நடக்கும். மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது; இது உடம்பு கேட்கும் வியாதி
பெண்களின் ஓட்டுகளை வாங்க பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள். குடிப்பதைக் குறைக்கலாம்; ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
மேலும் தனது கட்சியின் கொள்கைகள் குறித்து அவர் கூறியபோது, 'கொள்கை என்பது வேறு, திட்டம் என்பது வேறு; திட்டத்தின் பட்டியலே கொள்கை என நினைக்கிறார்கள். கிராம மேம்பாடு என்பதே எங்கள் கொள்கை; அங்கு என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டம். கிராம மேம்பாட்டை போல் விவசாய மேம்பாடு என்ற கொள்கையின் கீழ் பல திட்டங்களை வைத்துள்ளோம்
மக்கள் நலம், தமிழகத்தின் வளம்தான் கொள்கை என வைத்தால் எத்தனை திட்டம் வேண்டுமானாலும் போடலாம். கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் தேர்வு மூலம் மத்திய அரசு பின்னுக்கு இழுக்க வேண்டாம்' இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.