கள்ளக்காதல் குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,September 28 2018]
நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஒரு தீர்ப்பில் திருமணத்திற்கு பின்னர் 'தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல என்றும் திருமணத்திற்கு பின்னர் தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் தனது கருத்தை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
நான் எப்போதுமே கொஞ்சம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவன். திருமணத்திற்கு பின்னர் வேறொருவருடன் உறவு என்பதில் தவறில்லை. நம்முடைய புராணத்தில் கூட இந்த அளவு திறந்த மனம் உள்ளது. இன்றைய நவீனயுகத்தில் ஆணுக்கும் பெண்ணும் சமமான ஒரு நிலை வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன். நான் இதுகுறித்து வாதம் செய்ய விரும்பவில்லை, நீங்கள் யோசித்து பார்த்தால் கலாச்சாரம் ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும்' என்று கூறியுள்ளார்.