எனது டுவிட்டர் கருத்துக்கள் புரியாமல் இருப்பதும் நல்லதுதான்: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Monday,January 08 2018]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் ஆளும் அரசின் மீது விமர்சனங்களும், சமூக அவலங்களை எடுத்துரைக்கும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். அவருடைய கருத்துக்கள் ஆக்கபூர்வமாக இருந்தாலும் அவர் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகள் பலருக்கு புரிவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவர் பயன்படுத்தும் தூய தமிழ் பொதுமக்களுக்கு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் சிலசமயம் புரிவதில்லை.
ஊடகங்களும் நெட்டிசன்களும் இதை ஒரு குறையாக கமல்ஹாசனை கூறி வரும் நிலையில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழா நிகழ்ச்சியில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அவர் கூறியதாவது: டுவிட்டரில் நான் கருத்துகள் பதிவிடும்போது பயன்படுத்தும் தமிழ் பற்றி பேசப்படுகிறது. சிறு குழந்தைகள் தங்களுக்குள் சமிக்ஞை மொழியில் கானா பாஷையில் பேசுவது உண்டு. உடனே புரிந்து கொள்ளக்கூடாது என்ற யுக்திதான் அது. சில வார்த்தைகளை பொத்தாம் பொதுவாக சொல்லும்போது கெட்ட வார்த்தைபோல் தோன்றும். அதை தவிர்க்கவே டுவிட்டரில் நல்ல தமிழை பயன்படுத்துகிறேன். அது சிலருக்கு புரியாமல் போகலாம். அதுவும் நல்லதுதான்' என்று கூறினார்.
மேலும் தனது அரசியல் வருகை குறித்து கமல் கூறியதாவது: அரசியலில் கணுக்கால் கூட நனைக்க கூடாது என்றுதான் ஒதுங்கி இருந்தேன். 2015-ல் கட்டுப்பாடு இல்லாத வெள்ளம் எப்படி வந்ததோ அதுபோல் எங்களை இந்த சமூக அவலம் தாக்கிக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்தில்தான் இருந்து கொண்டு இருக்கிறோம். கழுத்தளவுக்கு அசிங்கமான விஷயங்கள் எங்களை சூழ்ந்து விட்டன.
அதில் இருந்து மேம்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் இறங்கி இருக்கிறோம். இது தனி மனிதன் செயலாக இருக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும். உலகத்தின் மையம் ரசிகர்கள்தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல. திறமையை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்' என்று கூறினார்.