சபாஷ் நாயுடு பணியை மீண்டும் தொடங்கினார் கமல்

  • IndiaGlitz, [Monday,August 29 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு சிலநாட்களுக்கு முன் அவர் தனது அலுவலகத்தில் மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்தார். இதற்கான சிகிச்சை முடிந்து தற்போது அவர் பூரண குணமடைந்துள்ள நிலையில் 'சபாஷ் நாயுடு' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான பேப்பர் வொர்க்கை மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்திற்காக படமாக்க வேண்டிய காட்சிகள் தனது மனதில் காட்சிகளாக எழுந்து வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், சிகிச்சைக்கு பின்னர் தனக்கு பயிற்சி கொடுத்த பிசியோதெரபியர்களுக்கும், தான் விரைவாக குணமடைய வாழ்த்தியவர்களுக்கும், கமல் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் முதல்முறையாக கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்பட பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.