புலியை கொல்ல வேண்டாம்: கமல்ஹாசன் வேண்டுகோள்
- IndiaGlitz, [Saturday,October 02 2021]
கடந்த சில நாட்களாக கூடலூர் அருகே அப்பாவி பொதுமக்களை தாக்கி கொன்று வரும் புலியை கொல்ல வேண்டாம் என்றும் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவரை புலி தாக்கி கொன்றது. இதனை அடுத்து T-23 என்று அழைக்கப்படும் அந்த ஆட்கொல்லி புலி, சிங்காரா என்ற வனப்பகுதி அருகே தென்பட்டதாகவும் அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை தாக்க முயன்றதாகவும் செய்திகள் வெளியாகியது.
இதனை அடுத்து புலியை பிடிக்கும் வரை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே நடமாட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் குறும்பர் பாடி என்ற பகுதியை சேர்ந்த 65 வயது பழங்குடியின முதியவர் ஒருவரையும் புலி கொன்று வனப்பகுதிக்குள் இழுத்து சென்றதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் 75 பேர் பணிபுரிந்து கொண்டு இருப்பதாகவும் மயக்க ஊசி கொடுத்து பிடிக்க முழுவீச்சில் தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதுவரை 4 பேரை கொன்றுள்ள அந்த புலியை சுட்டுக்கொல்ல முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டதை அடுத்து அந்த புலியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 2, 2021