பெரியார் சிலை பிரச்சனை ஏன் வந்தது தெரியுமா? கமல் கூறும் திடுக்கிடும் குற்றச்சாட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளத்தில் பெரியார் சிலை குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் தமிழகமே கொந்தளித்துள்ளது. இன்று காலை முதல் பெரியார் சிலை சேதப்படுத்தும் நிகழ்ச்சியும், பாஜக அலுவலகம் தாக்கப்படும் நிகழ்ச்சியும் மாறி மாறி நடந்து வருவதால் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் பெரியார் சிலை பிரச்சனை காவிரி மேலாண்மை விவகாரத்தை திசை திருப்பவே ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சனைக்கு பின்னால் மத்திய அரசு இருப்பதாக தனக்கு இருப்பதாகவும் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
பெரியார் சிலையை உடைப்பது தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்த பாஜகவின் எச்.ராஜா பின்னர் அதனை நீக்கியுள்ளார். தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜாவின் வருத்தத்தினை ஏற்க முடியாது. அவர் ஏன் இவ்வாறு கலக வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்பதனைக் கவனிக்க வேண்டும். இது தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கான நேரம் குறைந்து வருகிறது. அதில் இருந்து நமது கவனத்தை திசை திருப்பவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகிறது என நினைக்கிறேன்.
மேலும் தனக்கு தெரியாமல் பதிவு என எச்.ராஜா கூறுவது நொண்டி சாக்கு, அவர் வருத்தம் தெரிவித்ததையே ஏற்று கொள்ளாத நான் இந்த நொண்டி சாக்கை எப்படி ஏற்றுக்கொள்வேன்.
தற்பொழுது மாநிலம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை. பொதுமக்களே அதனை பாதுகாத்துக் கொள்வார்கள். பெரியார் சிலையை யாராலும் தொட முடியாது. வேண்டுமென்றால் இவ்வாறு பேசுபவர்களுக்கு வேண்டுமானால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கட்டும், நிச்சயம் இந்த பாதுகாப்பு அவர்களுக்கு தேவைப்படும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout