சிக்கலான கேள்விகளில் இருந்து நழுவிய பிக்பாஸ் கமல்!
- IndiaGlitz, [Sunday,June 30 2019]
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் கேப் கிடைக்கும்போதெல்லாம் தனது பெருமையையும் அரசியல் கருத்தையும் திணிக்கும் முயற்சியில் முதல் பாகத்தில் இருந்தே இருந்து வந்தார் என்பது தெரிந்ததே. தற்போது கட்சியும் ஆரம்பித்து முழு அரசியல்வாதி ஆகிவிட்டதால் சும்மா விடுவாரா? நேற்று நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் முடிந்தளவு தனது சொந்த கருத்துக்களையும் தற்பெருமையையும் கூற இதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி கொண்டார். குறிப்பாக கேள்வி கேட்டவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், அந்த கேள்வியையே தனக்கு சாதகமாக இன்னொரு கேள்வியாக மாற்றிக்கொண்டு பதிலளித்த விதம் அவரது புத்திசாலித்தனத்தை காட்டினாலும், கேள்விக்கான சரியான பதில் கிடைக்காததால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
குறிப்பாக மோகன் வைத்யா, 'உங்கள் வாழ்க்கையில் உங்களை பற்றிய கொடுமையாக, அநியாயமாக செய்யப்பட்ட விமர்சனம் எது? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், விமர்சகர்களை தான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை என்றும், விமர்சனத்தையே தொழிலாக வைத்துள்ளவர்களிடம் நாம் என்ன விளக்கம் கூறினாலும் பயனில்லை என்றும், அதனால் விமர்சனம் செய்பவர்களிடம் இருந்து சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து கொண்டு விமர்சனத்தை புறந்தள்ளி விடுவேன்' என்றும் கூறினார். கடைசிவரை மோகன் வைத்யா கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் உங்களால் விடமுடியாத கெட்ட பழக்கம் எது என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், 'பழக்கம் என்றால் பழகுபவர்கள் என்றும் ஒரு அர்த்தம் என்று மேதாவித்தனமாக விளக்கி, கூடா நட்புடன் ஒருசிலரிடம் பழகியதாகவும், மிகுந்த அன்பு கொண்ட பின்னர் அவ்வாறு நெருங்கி பழகியவர்களை விட முடியாது' என்றும் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலை கூறினார்.
மேலும் உங்கள் வாழ்வில் உடைந்த உறவுகளால் வந்த தாக்கம் என்ன? என்ற கேள்வியை கவின் கேட்டபோது, அனைவரும் ஒரு முக்கிய பதிலை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம்போல் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாத கமல், 'உடைந்த உறவுகளால் தான் இன்னும் வலுப்பெற்றதாகவும், உறவுகள் உடைந்தபோது தான் இன்னும் மனோதிடம் பெற்றதாகவும், தனக்கு மனோதிடம் கற்று கொடுத்ததே உடைந்த உறவுகள் தான் என்றும் கூறினார்.
மொத்தத்தில் நேற்றைய அரைமணி நேரம் கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிக்கலான கேள்விகளில் இருந்து நழுவியது மட்டுமின்றி கேள்வி பதில் நிகழ்ச்சியை தனக்கு சாதகமாகவும் கமல் பயன்படுத்தி கொண்டார்.