நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? கமல்ஹாசன் கேள்வி
- IndiaGlitz, [Monday,August 17 2020]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒரு பக்கம் ஊரடங்கு உள்பட பல்வேறு கெடுபிடிகள் இருந்தாலும் இன்னொரு பக்கம் கடந்த மே மாதம் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்தது. இதனால் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்த சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்காமல் இருந்தது ஒரு ஆறுதலை அளித்தது. ஆனால் நாளை முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்பதும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
டாஸ்மாக் கடைகள் முன் சாமியானா பந்தல் போட வேண்டும். மைக் ஏற்பாடு செய்ய வேண்டும், மூன்று அடிக்கு ஒரு வட்டம் போட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மது வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், தினமும் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டுவிட்டரில் இது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அவரது பதிவு இதுதான்:
காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக்கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?
கமல்ஹாசனின் இந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2020
மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?