ஜிப்ரானுக்கு கமலின் கின்னஸ் வாழ்த்து

  • IndiaGlitz, [Monday,April 25 2016]

கடந்த சில வருடங்களாக கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தற்போது சென்னை 2 சிங்கப்பூர்' என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களை சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பாதையில் உள்ள ஆறு நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பாடலை வெளியிட ஜிப்ரான் திட்டமிட்டுள்ளார். இந்த புதிய முயற்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: 'ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பாடலை வெளியிடும் புதிய முயற்சியில் ஜிப்ரான் இறங்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், இது தமிழனுக்குப் புதிய விசயமல்ல, தஞ்சாவூரிலிருந்து ஏற்கெனவே போயிருக்கிறார்கள், அவர்கள் போனதால் அது சிங்கபுரம் என்றும் சொல்வார்கள். கடாரம்கொண்ட சோழன் அவ்வழியாக சிங்கப்பூர் சென்றார்,

இப்போது இவர்கள் இசையால் ஆள்வதற்காக செல்கிறார்கள், அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இது கின்னஸ் சாதனையில் இடம்பெற வேண்டிய விசயம் என்றும் சொல்கிறார்கள் அப்படி நடப்பதற்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் வாழ்த்து பலித்து ஜிப்ரானுக்கு கின்னஸ் சாதனை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.