கண்ணாம்பூச்சி விளையாட்டு நடத்துகிறார்கள்: திமுக, அதிமுகவை விமர்சித்த கமல்ஹாசன் கட்சி!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த தேர்தல் குறித்த வழக்கு ஒன்றை திமுக உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளதால் உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில்‌ கடந்த 2016-ல்‌ நடந்திருக்கவேண்டிய உள்ளாட்சி தேர்தல்‌ இன்றுவரை நடத்தப்படாததால்‌, மக்கள்‌ அடிப்படை வசதிகளில்‌ ஏற்படும்‌ குறைபாடுகளை சுட்டிக்காட்ட, கோரிக்கை வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்‌ இல்லாமல்‌ தவித்து வருகிறார்கள்‌.

இந்த நிலையில்‌, ஆளும்‌ கட்சியும்‌ ஆள்வதற்கு.ஆலாய்‌ பறக்கும்‌ கட்சியும்‌, இதைப்‌ பற்றிய எந்த கவலையும்‌ இல்லாமல்‌ தங்கள்‌ சுயநலம்‌ வேண்டி உள்ளாட்சி தேர்தல்‌ நடைபெறாமல்‌ பார்த்துக்கொள்கிறார்கள்‌. மூன்று ஆண்டுகளாக புலி வருது புலி வருது” என்பது போல்‌ அரசு தேர்தல்‌ நடத்தபோவதாக அறிவிப்பதும்‌, அதில்‌ குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்திற்கு போவதுமாக, ஒரு கண்ணாமூச்சி விளையாட்டே நடந்துக்கொண்டே இருக்கிறது.

ஒருபுறம்‌ தேர்தல்‌ நடத்தப்படுவதாக பாவனைக்‌ காட்டி தனது கட்சிக்‌ காரர்களிடம்‌ விருப்பமனு பெறுவதும்‌ மறுபுறம்‌ தேர்தலுக்கு தடை போட மனுவோடு நீதிமன்ற வாசலில்‌ நிற்பதும்‌, இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த இவர்கள்‌ தங்கள்‌ கட்சிக்காரர்களையும்‌ ஏமாற்ற துணிந்துவிட்டார்கள்‌ என்பதையே காட்டுகிறது.

தமிழக மக்கள்‌ வரும்‌ 2021 சட்டமன்ற தேர்தலில்‌, இவர்களை அடையாளம்‌ கண்டு புறக்கணிப்பதுதான்‌ உள்ளாட்சி தேர்தல்‌ என்கின்ற ஒன்றை நடப்பதற்கும்‌, உண்மையான மக்களாட்சி உருவாவதற்கும்‌ வழியமைக்கும்‌ என்று நமது மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி நம்புகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.