கமல் திறந்து வைத்த மறைந்த நடிகரின் சிலை: நன்றி கூறிய பேத்தி!
- IndiaGlitz, [Sunday,May 15 2022]
தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகரின் 35 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் அந்த நடிகரின் சிலையை உலக நாயகன் கமல்ஹாசன் திறந்துவைத்தார்.
தமிழ் திரையுலகில் கடந்த 70களில் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் காமெடி நடிகர் ஐசரி வேலன். எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன், நான் ஏன் பிறந்தேன், இதயவீணை, உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி, நேற்று இன்று நாளை உள்பட பல திரை படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐசரிவேலனின் 35வது நினைவு தினம் அவரது மகனும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் அவர்களால் நினைவு கூறும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் ஐசரிவேலன் சிலை திறப்பு நிகழ்வு நடந்தது. இதில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன், ஐசரி வேலன் சிலையை திறந்து வைத்தார்.
இதுகுறித்து ஐசரி வேலனின் பேத்தியும் ஐசரி கணேஷின் மகளுமான ப்ரீத்தி கணேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இன்று என் தாத்தாவின் 35வது நினைவு தினத்தை நினைவு கூர்ந்தோம். பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்கள் என் தாத்தாவின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார். என் தாத்தாவின் கனவு, மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு குடும்ப சுகாதார அட்டை வழங்கும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினோம். இதன்மூலம் அவர்கள் தங்களது குடும்பத்தினர்களுடன் வேல்ஸ் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பட்டுப்புடவைகளும் சட்டைகளும் வழங்கினோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் நடிகை ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.